Thursday, February 19, 2015

சுரபுன்னை (மாங்குரோவ்)

கோடை சுற்றுலாவுக்கு எழில்மிகு பிச்சாவரம்!
சுரபுன்னை (மாங்குரோவ்) காடுகளின் ஒரு பகுதி.

சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது பிச்சாவரம் வனப்பகுதி. சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.

பிச்சாவரத்தின் கடற்கரை நீளம் 6 கி.மீ. மேற்கே உப்பனாறும், தெற்கே கீழத்திருக்கழிப்பாலை கிராமமும், வடக்கே சுரபுன்னை காடுகளும் எல்லைகளாக உள்ளன. பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்காடுகளில் உப்பங்கழிகளும், அடர்த்தியான மாங்குரோவ் செடிகளும் உள்ளன. கடலோரத்தில் உப்பனாற்றில் உள்ள இக்காடுகளில் சுமார் 4,400 கால்வாய்கள் உள்ளன. இக்காடுகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த மாங்குரோவ் (சுரபுன்னை) காடுகள், கால்வாய்களை சுற்றுலாப் பயணிகள் படகு மூலம் சென்று பார்க்கலாம். ஆண்டுதோறும் இப்பகுதியில் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் இப்பகுதிக்கு வெளிநாட்டுப் பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும்.

மேலும் கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு ஆகிய 3 எழில்மிகு தீவுகள் உள்ளன. மேற்கண்ட தீவுகளில் மீனவர்கள் வசித்து வந்தனர்.

2004 டிசம்பர் 26-ம் தேதி சுனாமி பேரலையின்போது மேற்கண்ட தீவுகளில் உள்ள மீனவர்கள் பலர் இறந்ததால் தற்போது அங்கு மீனவர்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். நடித்த இதயக்கனி படப்பிடிப்பு பிச்சாவரத்தில் நடைபெற்றதால் அங்குள்ள தீவுக்கு எம்.ஜி.ஆர். திட்டு என பெயர் சூட்டப்பட்டது.

இங்குள்ள சுரபுன்னை செடிகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், புற்றுநோய் மற்றும் கொடிய நோய்களை அழிக்கும் திறன் கொண்டது என எம்.எஸ்.சுவாமிநாதன் விஞ்ஞான ஆய்வு மைய சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மீனவர்களை புற்றுநோய் தாக்குவதில்லை என அந் நிறுவனத்தினர் தெரிவித்தனர். பிச்சாவரத்தில் உள்ள அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகத்தில் படகு குழாமை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் நடத்தி வருகிறது. சுற்றுலாப் பயணிகள் ஒரே இடத்திலிருந்து பிச்சாவரம் சுற்றுலா வனப்பகுதியை பார்க்கும் வண்ணம் உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்:

தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012- 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் இவனுக்கு "கடாரம் கொண்டான்' என்ற பட்டம் கிடைத்தது.

தன் தந்தை தஞ்சாவூரில் கட்டிய கோயிலைப்போல், கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டி, லிங்கத்தையும் நந்தியையும் பெரிதாக பிரதிஷ்டை செய்தான். தஞ்சாவூரைப்போலவே சிவனுக்கு பிரகதீஸ்வரர் என்றும், அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயர் சூட்டினான். பெரிய நாயகி பெயருக்கேற்றாற் போல் 9.5 அடி உயரத்தில் பிரமாண்டமாக அம்மன் அருள்பாலிக்கிறாள். நிமிர்ந்து பார்த்து தான் வணங்க வேண்டும். கோயில் கும்பாபிஷேகத்திற்கு தன்னிடம் தோற்ற மன்னர்களை கங்கையிலிருந்து தண்ணீரை தலையில் சுமந்து கொண்டு வரச்செய்து அபிஷேகம் செய்தான். இதனால் இவ்வூர் "கங்கை கொண்ட சோழபுரம்' ஆனது.

கும்பாபிஷேக நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு தோண்டி அதில் வடியச்செய்து, அதன் மேல் தனது சின்னமான சிங்கத்தின் சிலையை வடித்தான். கோயிலுக்கு வரும் போதெல்லாம் இந்த கங்கை நீரை தலையில் தெளித்து கொண்ட பின்பே சிவனை தரிசனம் செய்வான்.

பெரிய லிங்கம்:

தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் இங்கு தான் உள்ளது. தஞ்சை பெரிய கோயில் லிங்கம் 12.5 அடி உயரமும், 55 அடி சுற்றளவும் (ஆவுடையார்) கொண்டது. கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் லிங்கம் 13.5 அடி உயரமும், 60 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையை சுற்றி பலகை கட்டி, அதன் மீது ஏறிநின்று அபிஷேகம் செய்கின்றனர். ஒரே கல்லால் ஆன மூலவர் இங்கு பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். தஞ்சாவூரில் உள்ள லிங்கம் ஆணின் அம்சம். இங்குள்ள லிங்கம் பெண் அம்சமாகும். அங்கு உரல் வடிவம். இங்கு உடுக்கை வடிவம்.

தினமும் சூரிய தரிசனம்:

இங்குள்ள நந்தியும் தஞ்சாவூரை விட பெரியது. தஞ்சாவூரில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டு உயரமான மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள நந்தி சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு தரையில் அமர்ந்துள்ளது. தஞ்சாவூரில் மூலஸ்தானத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நந்தி உள்ளது. இங்கு 200 மீட்டர் இடைவெளியில் உள்ளது. தினமும் பகலில் இந்த நந்தியின் மீது சூரிய ஒளிபட்டு, அந்த ஒளி கருவறையில் உள்ள லிங்கத்தின் மீது பிரதிபலிப்பது மிகவும் சிறப்பு. மூலஸ்தானத்தில் உள்ள விளக்குகளை அணைத்து விட்டு இருட்டில் லிங்கத்தைப் பார்த்தால் மிகவும் அற்புதமாக இந்த ஒளி தெரியும் வகையில் வடிவமைத்துள்ளனர் நம் சிற்ப வல்லுனர்கள்.

சந்திரகாந்த கல்:

கருவறையில் உள்ள லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், வெயில் காலத்தில் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். குளிர் காலத்தில் குளிர்ச்சியை குறைத்து இதமான வெப்பத்தை தரும். இந்த அனுபவத்தை பல தலைமுறைகளாக இருந்து வரும் குருக்குள் தங்கள் சந்ததியினருக்கு கூறி வருகிறார்கள். இந்த வகை கல் வேறு எந்தக் கோயிலிலும் இருப்பதாக தெரியவில்லை.

அன்னாபிஷேகம்:

காஞ்சிமடத்தின் சார்பில், ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கான மூட்டை அரிசியை வேகவைத்து மூலவராக இருக்கும் பிரமாண்டமான லிங்கம் மூடும் அளவிற்கு சாதத்தினால் அபிஷேகம் செய்வார்கள். அன்றைய தினம் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இந்த அபிஷேகம் நடக்கும். அத்துடன் காய்கறி, கனி வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, சிறப்பு பூஜை நடக்கும். மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை பக்தர்கள் அன்னாபிஷேக லிங்கத்தை தரிசிப்பார்கள்.

அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பொதுவாக ஓடும் நீரில் விடுவது வழக்கம். குறிப்பாக பாணத்தின் மீது இருக்கும் அன்னத்தில் கதிர்கள் ஊடுருவி இருக்கும். அதை சாப்பிட்டால் அதன் சக்தியை தாங்கும் வலிமை நமக்கு கிடையாது. எனவே ஆவுடைப்பகுதியில் உள்ள அன்னத்தில், தயிர் கலந்து தயிர் சாதமாக பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இதைச் சாப்பிடுகிறார்கள்.

சுற்றமுடியாத நவக்கிரக மண்டபம்:

இங்குள்ள நவக்கிரகம் மற்ற கோயில்களை போல் இல்லாமல், ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் மிகவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்குரிய யந்திர வடிவில் 8 கிரகங்கள் சுற்றிலும் அமைக்கப்பட்டு, 7 குதிரைகள் பூட்டிய தேரில் மேற்கு நோக்கி சூரியன் அமர்ந்துள்ளார். தேரை அருணன் சாரதியாக இருந்து ஓட்டுகிறான். தேரிலுள்ள 10 கடையாணிகளும் கந்தர்வர்கள் எனக் கூறப்படுகிறது. நவக்கிரகங்கள் இந்த உலகை சுற்றி வருகின்றன. எனவே அதை யாரும் சுற்றக்கூடாது என்பதன் அடிப்படையில் இங்கு நவக்கிரகங்களை சுற்றமுடியாத படி மண்டப அமைப்பு உள்ளது.

குழந்தை வடிவில் துர்க்கை:

இங்குள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். இவள் ராஜேந்திர சோழனின் குலதெய்வம். 9 வயது சிறுமியின் வடிவில் சிரித்த முகத்துடன் 20 திருக்கரங்களுடன் மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில் அருளுகிறாள். இத்தகைய கோலத்தை காண்பது மிகவும் அபூர்வம். இவளை "மங்கள சண்டி' என்று அழைக்கிறார்கள். திருமணபாக்கியம், குழந்தை பாக்கியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஆகியவற்றுக்காக இவளை வணங்குகின்றனர். பதவி உயர்வுக்காகவும், பணியிட மாற்றத்திற்காகவும் அர்ச்சனை நடக்கிறது.

ராஜேந்திர சோழன் கோயிலுக்கு வந்தவுடன் முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின் தான் சிவனை வணங்குவான். இதன் அடையாளமாக இன்றும் கூட ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில், முதலில் துர்க்கையை வழிபாடு செய்த பின்னர் தான் சிவனை தரிசிக்க செல்கின்றனர். இவளுக்கு கோயிலின் இடது பக்கம் தனி சன்னதி உள்ளது.

கணக்கு விநாயகர்:

ஒருமுறை ராஜேந்திர சோழன் தன் அமைச்சரை அழைத்து "பெரிய கோயில் கட்டியதற்கு இது வரை எவ்வளவு செலவாகி உள்ளது?' என கேட்டான்.அமைச்சருக்கு சரியாக சொல்ல தெரியவில்லை. அவர் பதறிப்போய் அங்கிருந்த விநாயகரை வணங்கினார். "காவிக்கல் 8 ஆயிரம் செம்புகாசு, காவிநூல் 8 ஆயிரம் செம்பு காசு' என நினைவு வந்தது. எனவே "கணக்கு விநாயகர்' என்று அழைக்கப்பட்டார். தற்போது "கனக விநாயகர்' எனப்படுகிறார். இவர் தன் வலக்கையில் எழுத்தாணியுடன் உள்ளார்.

கோபுர அமைப்பு:

இங்குள்ள கோபுரம் சோழர் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தஞ்சாவூரைப்போலவே இங்கும் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பின் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள தஞ்சாவூர் கோபுரம் கீழிருந்து மேல் ஒரே சீராக கட்டப்பட்டிருக்கும். ஆனால் 180 அடி உயரம், 100 அடி அகலமுள்ள இக்கோயில் கோபுரம், கீழிருந்து 100 அடி உயரம் வரை அகலமாகவும், அதன் பின் 80 அடி உயரம் குறுகலாகவும் கட்டப்பட்டுள்ளது.கோபுர கலசத்தின் நிழல் கீழே விழுவது கிடையாது. தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக இக்கோயில் விமானம் தான் தமிழகத்தில் பெரிய விமானம் ஆகும்.

திறக்கும் நேரம்:

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழா:

மாசி சிவராத்திரி,மார்கழி திருவாதிரை ஆகிய தினங்களில் சிறப்பு பூஜையும்,பங்குனித்திருவிழாவின் கடைசி நாளில் துர்க்கைக்கு 500 குடம் பாலபிஷேகம் செய்யப்படுகிறது.ஐப்பசி பவுர்ணமி தினத்தில் இங்கு பல வருடங்களாக மிகவும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடந்து வருகிறது

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம்

தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு.

அதாவது பெரிய கோயில் விமானத்தில் காணப்படாத நெளிவுகள், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் காணப்படுவது பெண்ணின் நளினத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.

இதன் காரணமாகவே பெரிய கோயிலைப் போன்றே கட்டப்பட்டிருந்தாலும், சோழபுரம் கோயிலைப் பார்க்கின்றபோது ஒரு பெண்ணைப் பார்ப்பதுபோன்ற புது உணர்வு உண்டாகிறது.


பெருவுடையார் கோயில் தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிற்றூரில் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலுக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பெருவுடையார் கோயில் என்றே பெயர் இருப்பினும், இதன் அமைவிடமான கங்கைகொண்ட சோழபுரத்தின் பெயரிலேயே பிரபலமாக அழைக்கப்படுகிறது.
1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்றதோடு கங்கையையும் வெற்றிகொண்டான். அந்த வெற்றியின் காரணமாக 'கங்கை கொண்ட சோழன்' என்ற பட்டப்பெயரும் அவனுக்கு வழங்கப்பட்டது.

அதோடு அந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த ஊரும் நிர்மாணிக்கப்பட்டது. அதேவேளை கலைப்பொக்கிஷமான இந்த பெருவுடையார் கோயிலும் கட்டப்பட்டது.


தஞ்சை பெரிய கோயிலின் விமானம் 216 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்க, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விமானத்தின் உயரமோ 160 அடியே ஆகும்.

அதேபோன்று 13 நிலைகள் கொண்ட பெரிய கோயில் விமானத்தோடு ஒப்பிடுகையில் சோழபுரம் கோயில் விமானத்தில் 8 நிலைகளே உள்ளன.

ஆனால் நம் உள்ளங்களை கவரும் கவின் கொஞ்சும் வளைவுகள் சோழபுரம் கோயில் விமானத்தில் காணப்படுவதால், அதற்கு ஒரு பெண்ணியல்பை இவைத் தருகின்றன.

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஒருகாலத்தில் கோயிலாக மட்டுமில்லாமல் சிறந்த கோட்டையாகவும் விளங்கியிருக்கிறது. இப்போதும் கோயிலின் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரணும், மேற்கே சிறிய அரண் ஒன்றும் உள்ளது.

340 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலின் மண்டபம் 175 அடி மற்றும் 95 அடி நீள அகலத்துடன் காட்சியளிக்கிறது.

அதோடு மண்டபத்தையும், கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி ஒன்று அமைந்துள்ளது.

தஞ்சாவூர் கோயிலில் இருப்பதுபோன்றே இந்த இடைவழியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணைக் கவரும் துவார பாலகர்களுடனும், படிக்கட்டுகளுடனும் மிளிர்கின்றன.

பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்கிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.
கங்கைகொண்ட சோழபுரம் கட்டப்பட்ட காலத்திலேயே அம்மனுக்கும் ஒரு தனிக் கோயில் இங்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சந்நிதி, கோயில் கட்டிய பின் 200 ஆண்டுகளுக்கு பின்னர் 13-ஆம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

தஞ்சை பெரிய கோயிலில் இல்லாத சிறப்பாக இந்தச் சிற்பத்தை பலர் குறிப்பிடுகின்றனர். அருகில் பார்வதி வீற்றிருக்க, காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார்.
கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிம்ஹகேணி என்பது சிங்கத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறு.
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த நந்தி இந்தியாவின் மிகப்பெரிய நந்திகளில் ஒன்று.
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சிவபெருமானுக்கு முன்பு இரண்டு நந்திகள் இருக்கின்றன. இவற்றில் பெரிய நந்தி மண்டபத்துக்கு வெளியேயும், சிறியது மண்டபத்தின் துவக்கத்திலும் அமையப்பெற்றுள்ளன.




ராஜேந்திர சோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றான 'சோழ கேரளன் திருமாளிகை' கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அதன் சுவடுகள்தான் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இந்த அரண்மனையிலிருந்து, சோழபுரம் பெருவுடையார் கோயிலுக்கு சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் கும்பகோணம், அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மருத்துவக் குறிப்புகள் 4


31. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.

32. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!
33. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.
34. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
35. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
36. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
37. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம்,
கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
38. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
39. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
40 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.

மருத்துவக் குறிப்புகள் 3

21. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

22. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

 23. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது. 

24. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும். 

25. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும். 

26. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது. 

27. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும். 
28. தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும். 

29. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும். 

30. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

வீட்டிற்கு அழகூட்டும் கொடிவகை தாவரம்


வீட்டின் முன்புற சுவர்களிலும், போர்டிகோவிலும் முல்லை, மல்லி என மலர் கொடி தாவரங்களை வளர்த்து வீட்டிற்கு அழகூட்டுவார்கள். இவை பற்றிப் படர்ந்து நறுமணம் மிக்க பூக்களை பூத்து வீட்டிற்கு வருபவர்களை வாசனையால் வரவேற்கும். அதேபோல் வளைவுகளிலும், வேலி ஓரங்களிலும் வளர்ப்பதற்கு அலங்கார கொடி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் வகைகளைப் பற்றியும் கொடிகளை பயிரிடுவதற்கான பருவநிலைப் பற்றியும் ஆலோசனை கூறுகின்றனர் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள்.

அடினோகேளிமா (பூண்டு கொடி)

பசுமையான இலைகளைக் கொண்ட வெண்மை கலந்த சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு கொடி அக்டோபர் – பிப்ரவரி மாதங்களில் பூக்கும். விண்பதியம் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யலாம்.


செங்காந்தள் மலர்

தமிழ்நாட்டின் தேசிய மலர் எனப்படும் செங்காந்தள் மலர்கள் பிரிந்த நிலையில் அழகிய சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது நலிவான கிளைகளையுடைய கொடி வகை ஆகும்.

ஹோம்ஸ்க்கியான்டியா

வளைவாகப்படரும் கொடி குளிர்காலங்களில் பச்சை சிவப்பு நிற பூக்களைத் தரும்.

ரயில்வே கொடி (ஐப்போமியா)

ஊதா நிறப்பூக்களை உடையது. நீண்ட காலத்திற்கு பூக்கும் தன்மையுடையது.

ஜாக்மோன்ஷியா

வயலட் நிறத்தில் பூக்கள் மிகவும் அடர்த்தியாக பூக்கும் தன்மை பெற்றது. சற்றே நிழலில் உள்ள இடங்களுக்கேற்றது.

ஆண்டி கோனான் லெப்டோப்பஸ் இரயில் பூ

கிழங்கு வகை கொடியாகும், பூக்கள் சிவப்பு நிறமாகவும் தேனீக்களை கவரும் கொடியாகும்.

அலமாண்டா

மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் மஞ்சள் நிறத்தில் மழைக்காலங்களில் பூக்கும் தன்மை உடையது

அஸ்பராகஸ் ப்ளுமோசஸ்

சிறகு போன்ற இலையுடைய கொடி வகையாகும். விதை மூலம் பயிர்பெருக்கம்.

பிக்னோனியா வெனுஸ்டா

இலையுதிர் கொடி வகை ஆகும். பூக்கள் அடர் ஆரஞ்சு நிறத்தில் தொங்கிய வண்ணமிருக்கும். மெதுவாக வளரும் கொடிகள். பதியன் மூலம் பயிர்பெருக்கம்.

சங்குப்பூ
விதை மூலம் பயிர்பெருக்கம்,தொட்டியில் வளர்க்க ஏற்றவை. வெள்ளை மற்றும் ஊதா நிறப்பூக்கள்

பெட்ரியா

கொடி அடர்த்தியாக வளரும். மலர்கள் நீல நிறத்தில் கொத்து கொத்தாக இருக்கும். பிப்ரவரி – நவம்பர் வரை பூக்கும்.

வெர்னோனியா

இந்த தாவரங்களை நிழல் பந்தல்கள் , அலங்கார குடைகள் , நடைபாதை பந்தல்கள் ஆகியவற்றில் படரவிட்டு நல்ல நிழல் பெறலாம்.

தாட்பூட் பழக்கொடி

பெரிய இலைகளுடன் அடர்த்தியாக வளரும் கொடியினை பந்தல் , வேலி முதலிய இடங்களில் படரவிட்டு வளர்க்கலாம். வெள்ளை நிறத்தில் கவர்ச்சியான பெரிய பூக்கள் தோன்றும்.

ஆஸ்திரேலிய பைன் ஆப்பிள் (மான்ஸ்டீரியா)

பெரிய மரங்களில் படரவிட ஏற்ற கொடி. இலைகள் பெரியதாக அழகாக இருக்கும். தொட்டிகளில் நட்டு வீட்டின் உட்புற அலங்காரத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.

பற்பசை உருவான வரலாறு

அனைவருக்கும் வணக்கம், ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதை உலகிற்கு கற்றுகொடுத்தவர்கள் இந்தியர்கள் என்றால் மிகையில்லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம், நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகுதான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும்அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கு எடுத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் அடிப்படையான செயலாக அமைகிறது என்றால் மிகையில்லை. சரி இந்த பல்துலக்கும் பழக்கம் எந்த நாட்டு மக்களிடம் முதன் முதலில் தோன்றியது என்று தெரியுமா நண்பர்களே.. நம்புங்கள் இந்தியர்களிடம் தான் பல்துலக்கும் பழக்கம் முதன் முதலில் இருந்ததாக கூறுகிறது வரலாறு.
கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் (Indus Valley Civilization, 3300 BCE – 300 BCE) வாழ்ந்த இந்திய மக்களிடம் தான் உலகில் முதன் முதலில் பல் துலக்கும் பழக்கம் இருந்ததாக அறியப்படுகிறது. ஆரம்பத்தில் குருமணலை (Sand Powder) பல் துலக்குவதற்க்காக பயன்படுத்திய இவர்கள் போகப்போக எரிந்த மரங்களின் சாம்பலை விரலால் தொட்டு பல் துலக்க ஆரம்பித்தனர். கெளதம புத்தர் (Gautama Buddha, 563 BCE – 483 BCE) வாழ்ந்த காலத்தில் வேப்பமர குச்சிகளை (Neem-Trees Twigs) பல் துலக்க பயன்படுத்தும் அளவிற்கு சிந்து சமவெளி மக்கள் நாகரீகத்தில் வளர்ச்சியடைந்திருந்தனர் என்று தெரிவிக்கிறது வரலாறு. சுருக்கமாக சொன்னால் கிட்டத்தட்ட 3000 (1000 BCE) ஆண்டுகளுக்கு முன்பே தினந்தோறும் காலையில் எழுந்ததும் பல் துலக்கும் பழக்கம் சிந்து சமவெளிப்பகுதியில் வாழ்ந்த இந்திய மக்களிடம் இருந்திருக்கிறது.
பின்பு கி.மு ஐந்தாம் நூற்றாண்டு (500 BCE) வாக்கில் சில வணிகர்களின் வாயிலாக இந்தியர்களிடமிருந்து பல் துலக்கும் பழக்கம் சீன (China) மற்றும் எகிப்திய (Egypt) மக்களை எட்டியது. சில நூற்றாண்டுகள் வரை சாம்பலை பயன்படுத்திய எகிப்தியர்கள், அன்றாடம் பல் துலக்குவதற்கு சாம்பல் உகந்தது அல்ல என்பதை விரைவிலேயே அறிந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து பல்துலக்க தனியாக பொடி தயாரிக்கும் பணியில் மும்முறமாக இறங்கினார்கள் எகிப்தியர்கள். பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பிறகு, உப்பு (Salt), புதினா இலை (Mint Leafs), ஐரிஸ் மலர் (Iris Flower), மிளகு (Pepper) ஆகியவற்றுடன் இருபது வகை தானியங்களை சேர்த்து பொடியாக்கி கி.பி நான்காம் நூற்றாண்டில் (400 AD) வாக்கில் உலகின் முதல் பற்பொடியை (Tooth powder) தயாரிப்பதில் வெற்றியடைந்திருந்தனர் எகிப்தியர்கள்.
ராஜ வம்சத்தினர் மட்டும் பயன்படுத்திய இந்த பற்பொடியின் தயாரிப்பு முறை பற்றிய குறிப்புகள் பாப்பிரசு தாள்களில் எழுதப்பட்டு அவற்றில் சில பாப்பிரசு தாள்கள் இன்றும் ஆஸ்திரியாவின் (Austria) தலைநகர் வியன்னாவில் (Vienna) உள்ள அருங்காட்சியகத்தில் (Museum) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எல்லோரும் அறிந்த பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட பற்பசையின் வரலாறு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்து துவங்குகிறது. எகிப்தியர்கள் பாப்பிரசு தாள்களில் குறிப்பிட்டிருந்த பற்பொடி தயாரிப்பு முறையை அடிப்படையாகக் கொண்டு பெர்சியாவை சேர்ந்த இஸ்லாமிய பல்துறை (Polymath) வல்லுனரான ஷிர்யாப் (Ziryab, 789 AD) என்பவர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் (900 AD) புதிய முறையில் அதிக அளவில் பற்பொடி தயாரிக்கும் முறையை கண்டறிந்தார்.
ஷிர்யாப் தனது பற்பொடியை தயாரிக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்தினார் என்பதை ரகசியமாக வைத்திருந்ததால் இறுதிவரை அவர் என்னென்ன பொருட்களை பயன்படுத்தி அந்த பற்பொடியை தயாரித்தார் என்பது வெளியுலகிற்கு தெரியாமலேயே போனது. சுவைமிக்கதாகவும், நறுமணமிக்கதாகவும் இருந்த ஷிர்யாப்பின் பற்பொடி, இன்றைய நவீன பற்பொடியைப்போல பல்துலக்கியதும் புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் தவறவில்லை. உலகின் முதல் பற்பொடி என்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இவரது பற்பொடி அக்காலத்தில் ஸ்பெயின் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ்ந்த மக்களின் பிரதான பற்பொடியாக இருந்தது சாம்பல் தான் என்றால் மிகையில்லை. பற்பொடி தயாரிக்கும் தொழிலும் குடிசை தொழிலாகவே மேற்கொள்ளப்பட்டதால் பற்பொடி எல்லை கடந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாகும் வாய்ப்பை பெறவில்லை, ஆகையால் 1950 ஆம் ஆண்டு வரை பெரும்பாலான நாடுகளில் சாம்பல் தான் பிரதான பற்பொடியாக இருந்துவந்தது. இதில் ஆச்சரியமான மற்றுமொறு உண்மை என்னவென்றால் கி.பி.18 ஆம் நூற்றாண்டு வரை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டு மக்களிடையே பல்துலக்கும் பழக்கம் நடைமுறையில் இல்லை என்பதுதான். இதை நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் உண்மை அதுதான்.
கி.பி.18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தான் பல்துலக்கும் பழக்கம் இங்கிலாந்தில் ஏற்பட ஆரம்பித்தது அதைத்தொடர்ந்து அமெரிக்க மக்களிடையேயும் பல் துலக்கும் பழக்கம் ஏற்பட ஆரம்பித்தது. ஆரம்பத்தில் சாம்பலை பயன்படுத்திய இவர்கள் நாளடைவில் உப்பு (Salt), படிகாரம் (Alum), லவங்கப்பட்டை (Cinnamon), ஆகியவற்றை சேர்த்து அரைத்த பொடியைக் கொண்டு பல் துலக்க ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து கி.பி.1824 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த பியாபாடி (Dr. Peabody, Dentist) என்ற பல் மருத்துவரால் பற்பொடி தயாரிக்க பயன்படுத்தும் ஏனைய மூலப்பொருட்களுடன் சோப்பையும் (Detergent Soap) சேர்த்து பயன்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது. வாசிக்கும் உங்களில் பலருக்கு உங்களது சிறியவயதில் நீங்கள் உப்புச்சோப்பை பல்துலக்க பயன்படுத்தியது இப்போது உங்கள் நினைவில் வந்தால் ஆச்சிரியப்படுவதற்க்கில்லை. தொடர்ந்து 1850 ஆம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த ஜான் ஹாரிஸ் (Dr. John Harris, Dentist) மற்றுமொறு பல் மருத்துவரால் மேற்சொன்ன மூலப்பொருட்களுடன் சுண்ணாம்பையும் (Chalk) சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டது.
நியூயார்க் நகரில் 1806 ஆம் ஆண்டு வில்லியம் கோல்கேட் (William Colgate, 1783 – 1857) என்பவரால் துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த கோல்கேட் & கம்பெனி (Colgate & Company, Founded in 1806, presently as Colgate-Palmolive) பற்பொடியின் முக்கியத்துவத்தை பற்றி அறிந்து பல்வேறு வகையான பற்பொடி தயாரிப்பு முறைகளை ஆய்வு செய்து இறுதியில் உப்பு (Salt), படிகாரம் (Alum), சுண்ணாம்பு (Chalk) ஆகியவற்றை கொண்டு வணிகரீதியான உலகின் முதல் பற்பொடியை 1873 ஆம் ஆண்டு தயாரித்து ‘கோல்கேட் பற்பொடி’ (Colgate Toothpowder) என்ற பெயரில் குடுவைகளில் (Jar) அடைத்து விற்பனை செய்ய ஆரம்பித்தது. அதுவரையிலும் குடிசை தொழிலாக இருந்துவந்த பற்பொடி தயாரிக்கும் தொழில், அதன்பிறகு வணிகத்துவம் பெற ஆரம்பித்தது. இக்காலகட்டங்களில் தான் அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மக்களிடையே தவறாமல் அன்றாடம் பல்துலக்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
சுண்ணாம்பு கலந்து தயாரிக்கப்பட்ட பற்பொடிகள் சில நாட்களிலேயே மனிதர்களில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த துவங்கியது, இதனால் மனிதர்களின் கவனம் மீண்டும் சாம்பலை நோக்கி திரும்பிய அந்த நேரத்தில் வரலாற்றில் முக்கிய திருப்பமாக வாஷிங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பில்டு (Washington Wentworth Sheffield) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பல் மருத்துவர் இயற்கையாக கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளை (Calcium Fluoride) கொண்டு பற்பசை தயாரிக்கும் தொழில்நுட்பம் ஒன்றை 1892 ஆம் ஆண்டு கண்டறிந்தார். தொடர்ந்து பற்பசையை அடைத்து விற்ப்பதற்க்காக மடக்கு குழாய்களை (collapsible tube) தயாரிக்கும் தொழில்நுட்பத்தை 1894 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். இரண்டையும் ஷெப்பில்டு காப்புரிமை பெறுவதற்குள் கோல்கேட் கம்பெனி இவர் தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு பற்பசை (Toothpaste) தயாரித்து மடக்கு குழாய்களில் அடைத்து கோல்கேட் டூத்பேஸ்ட் (Colgate Toothpaste) என்ற பெயரில் சந்தையில் விற்பனை செய்ய ஆரம்பித்தது.
கி.மு-வில் பிறந்தவர்களுக்கே பக்கம் பக்கமாக தகவல் வைத்திருக்கும் விக்கிபீடியா, 1900-களில் வாழ்ந்த ஷெப்பில்டு பற்றி முக்கியமாக உலகின் முதல் நவீன பற்பசையை தயாரித்த இவரை பற்றி ரெண்டே வரிகளில் தகவல் வைத்திருக்கும் ஆச்சிரியத்தை பார்த்தால் அவரைப்பற்றிய தகவல்களை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இன்றும் கூட அதிக அளவு மாற்றத்தை சந்திக்காமல் ஷெப்பில்டு தயாரித்த அதே தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுதான் பற்பசையும், பற்பசையை அடைத்து விற்க பயன்படுத்தும் மடக்குகுழாய்களும் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பற்பசை உற்பத்தி சூடுபிடிக்க ஆரம்பித்த சமயத்தில் திடீர் திருப்பமாக 1937 ஆம் ஆண்டு, புளோரைடு பற்பசைகள் பற்களுக்கு உகந்தது அல்ல என்று அமரிக்க பல் சங்கம் (American Dental Association, known as ADA) தடை செய்ய முன்வந்தது. பெறும் சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் பொருட்டு வில்லியம் ப்ரோக்டர் (William Procter, 1801 – 1884) மற்றும் ஜேம்ஸ் கேம்பல் (James Gamble, 1803 – 1891) என்ற இரு அமெரிக்கர்களால் 1837 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்த ப்ரோக்டர் & கேம்பல் (Procter & Gamble, Founded at USA in 1837, known as P&G) என்ற நிருவனம் ஜோசப் முஹ்லர் (Dr. Joseph Muhler) என்பவரை தலைமையாக மருத்துவக்குழு ஒன்றை அமைத்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்ட இக்குழு 1955 ஆம் ஆண்டு வாக்கில் புளோரைடு பற்பசைகளின் நம்பகத்தன்மை மற்றும் பின்விளைவுகள் பற்றிய தங்களது விரிவான அறிக்கையை அமெரிக்க பல் சங்கத்திடம் (ADA) சமர்பித்தது. அறிக்கையை ஆய்வு செய்த ADA 1960 ஆம் ஆண்டு புளோரைடு பற்பசைகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்தது, அதாவது பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 1000ppm-க்கு (PPM – Parts Per Million), மிகாமலும் சிறியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் புளோரைடின் அளவு 500ppm – க்கும் மிகாமலும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் பிறகு தான் பற்பசை உற்பத்தி அதிகரித்து புதிய பரிணாமத்தை அடைய துவங்கியது.
நம் பெற்றோர்களில் பலர் தாங்கள் பயன்படுத்தும் அதே பற்பசையையே தங்களது குழந்தைகளுக்கும் வாங்குவார்கள். இது முற்றிலும் தவறானது, பற்கள விழுந்து முளைக்கின்ற வரையில் அந்தந்த வயதுக்கு ஏற்ற பற்பசைகளை உபயோகிப்பதே சிறந்தது. இன்றைய நவீன பற்பசை தயாரிப்பில் மூன்றே மூன்று புளோரைடுகள் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அவையாவன, சோடியம் புளோரைடு (Sodium Fluoride, NaF), ஸ்டன்னஸ் புளோரைடு (Stannous Fluoride, SnF2), சோடியம் மோனோபுளோரோபாஸ்பேட் (Sodium Mono-fluoro-phosphate, Na2Po3F) ஆகியனவாகும். பற்பசை தயாரிக்கும் நிறுவங்களை பொறுத்து பயன்படுத்தப்படும் புளோரைடும் மாறுபாடடைகிறது. பெரும்பாலான நிருவனங்களால் சோடியம் புளோரைடு மற்றும் சோடியம் மோனோ-புளோரோபாஸ்பேட் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை பற்களை சுத்தம் செய்வதில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது ஈறுகளை (Enamel) தாக்கும் தன்மை கொண்டவை. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு ஸ்டன்னஸ் புளோரைடு கொண்டு தயாரிக்கப்பட்ட பற்பசைகளே சிறந்தவை. இவை சற்று விலை அதிகமாக இருந்தாலும் இவற்றை பயன்படுத்துவதே பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது.
அடுத்தத முறை பற்பசை வாங்கச் செல்லும் போது மேற்சொன்ன விசயங்களை கவனத்தில் கொள்ளவும் நண்பர்களே.!

அவல்புட்டு


தேவையான பொருட்கள் :

அவல் - 1 கப்
துறுவிய வெல்லம் - 1 கப்
துறுவிய தேங்காய் - அரை கப்
துவரம் பருப்பு - அரை கப்
நெய் - 1 தே‌க்கர‌ண்டி
முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 தே‌க்கர‌ண்டி
உப்பு - அரை தே‌க்கர‌ண்டி
கேசரி மஞ்சள் கலர் - 2 சிட்டிகை
ஏலக்காய் பொடி - அரை த‌ே‌க்கர‌ண்டி

செய்முறை :

அவலை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து கரகரப்பாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் ‌சி‌றிது உப்பு, கேசரி பவுடர் சேர்த்து கலந்த இளம் சூடான தண்ணீரை தெளித்து பிசிறி வைக்கவும். துவரம் பருப்பை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து தண்ணீரை வடித்து, பருப்பை ஈரமில்லாமல் பிழிந்து தனியே வைக்கவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறு‌த்து எடு‌க்கவு‌ம்.

ஒரு வாணலியில் வெல்லத்தைப் போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டுச் சூடாக்கவும். வெல்லம் கரைந்ததும், வடிகட்டி மறுபடியும் வாணலியைக் கழுவி அதிலேயே வெல்லக் கரைசலைக் கொட்டி, பாகுவரும்வரை கிளறவும்.

இளம் உருண்டைப் பாகு வரும்போது தேங்காய்த் துறுவல், துவரம் பருப்பு சேர்த்து கலந்து விட்டு பிசறிய அவல் பொடியைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி விட்டு, ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, நல்லெண்ணெய் சேர்த்து உதிரியாக வரும்வரை கிளறி எடுக்கவும்.