Saturday, February 14, 2015

விண்டோஸ் சில புதிய குறிப்புகள்

விண்டோஸ் சில புதிய குறிப்புகள்

விண்டோஸ் இயக்கத்துடன் தான் நம் பொழுது முழுவதும் செல்கிறது. இருப்பினும், விண்டோஸ் இயக்கத்தில் நாம் இன்னும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. இவை அவ்வப்போது நாம் பணியாற்றிக் கொண்டிருக்கையில் தெரியவருகின்றன. அவ்வாறு கண்டறிந்த சில செயல்பாடுகளை இங்கு காணலாம்.

1. அசைத்து எறி (Shake It Off): ஒரே நேரத்தில் பல விண்டோக்களைத் திறந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மானிட்டர் திரை, எந்த ஒழுக்கத்திற்கும் கட்டுப்படாமல் குழப்பமான ஒரு காட்சியைக் காட்டிக் கொண்டிருக்கிறதா? விண்டோஸ் 7 மற்றும் அதனை அடுத்து வந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இதற்கான தீர்வாக, வியக்கத்தக்க வழி ஒன்று தரப்பட்டுள்ளது. நீங்கள் எந்த விண்டோவினை மட்டும் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ, அதன் டைட்டில் பார் மீது கிளிக் செய்து அப்படியே மவுஸைத் தக்க வைக்கவும். பின், அதனை மவுஸ் கொண்டு முன்னும் பின்னுமாகச் சற்று அசைத்திடவும். இப்போது பிற விண்டோக்கள் அனைத்தும் டாஸ்க் பாருக்கு வந்துவிடும். இந்த வசதிதான் Aero Shake என அழைக்கப்படுகிறது. இதே வசதி விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா சிஸ்டத்தில் தேவை எனில், அதற்கான தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தி ஏற்படுத்தலாம்.

2. வால்பேப்பர் ஸ்லைட் ஷோ: உங்களுடைய டெஸ்க் டாப்பில் ஒரே ஒரு வால் பேப்பர் காட்சியை அமைத்து, அதனையே தொடர்ந்து பார்ப்பது, உங்களுக்கு சில வேளைகளில் அலுத்துப் போகும். ஏன் ஒரே ஒரு வால் பேப்பருடன் நாம் திருப்தி அடைய வேண்டும்? ஒரே நேரத்தில் பல வால் பேப்பர்களைக் காட்டும்படி நாம் செட் செய்திடலாம். இதற்கு டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Personalise > Desktop Background எனச் செல்லவும். இது உங்கள் வால் பேப்பரை செட் செய்திடத் தேவையான விண்டோவினைத் திறக்கும். இங்கு பல படங்கள் கிடைக்கும். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், எந்த கால அவகாசத்தில் இந்த படங்கள் மாறி காட்சி அளிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். எந்த படத்தில் தொடங்கி முடிய வேண்டும் என்பதனையும் நிர்ணயம் செய்திடலாம். இதன் மூலம், டெஸ்க் டாப் படத்தினை மாற்ற ஒவ்வொரு முறையும் நீங்கள் டெஸ்க்டாப்பில் வேலை செய்திட வேண்டியதில்லை.

3. விரைவாக டாஸ்க்பார் திறத்தல்: வேகம் வேகமாகக் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நமக்கு, மவுஸை டாஸ்க் பார் கொண்டு சென்று, அங்குள்ள ஐகான்களைக் கிளிக் செய்வது கூட நேரம் எடுக்கும் செயலாக இருக்கும். இதற்குப் பதிலாக, விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் ஐகான் வரிசையில் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கான எண்ணை அழுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, டாஸ்க் பாரில் வேர்ட் புரோகிராமிற்கான ஐகான் மூன்றாவதாக இடம் பெற்றிருந்தால், விண்டோஸ் கீ + 3 அழுத்தினால் போதும். வேர்ட் விண்டோஸ் திறக்கப்படும்.

4. ரிசோர்ஸ் மானிட்டர்: உங்களுடைய கம்ப்யூட்டர் சிஸ்டம் வழக்கத்திற்கும் மாறாக, மெதுவாக இயங்கினால், அது நம்மைக் கவலைக்குள்ளாக்கும். எதனால் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று அறிய ஆவலாயிருக்கும். இதற்கு ரிசோர்ஸ் மானிட்டர் நமக்கு பயன்படும். Resource Monitor எனத் தேடல் கட்டத்தில் டைப் செய்து, அதனைத் திறக்கவும். இங்கு கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து புரோகிராம்களும், கம்ப்யூட்டரின் பலவகைத் திறனை எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று தெரிய வரும். ஒரு குறிப்பிட்ட புரோகிராமின் செயல்பாட்டினை சி.பி.யு. மற்றும் மெமரியினை அடுத்து அடுத்துப் பார்க்கையில் அதன் செயல்பாட்டுக்கான திறன் எவ்வளவு எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று தெரிய வரும். இதில் அதிகம் நம் சிஸ்டத்தைப் பயன்படுத்தும் புரோகிராமினைக் கண்டு, அதனை நிறுத்திப் பின்னர் இயக்கலாம்.

5. அழித்ததைத் திரும்பப் பெற: நாம் எல்லாரும் Ctrl + C and Ctrl + V போன்ற கட்டளைகளை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளோம். பலருக்குக் Ctrl + Z என்ற கட்டளை இருப்பது தெரியாது. இதனைப் பயன்படுத்தி, நாம் அப்போதுதான் நீக்கியிருந்த செயல்பாட்டினை மீட்டெடுக்கலாம். ஏதேனும் பைல் ஒன்றை அழித்து ரீசைக்கிள் தொட்டிக்கு அனுப்பி இருந்தால், Ctrl + Z கீகளை அழுத்தினால், அது மீண்டும் பழைய இடத்திற்கே வரும். இது போல நீக்கப்பட்ட பல செயல்பாடுகளை மீட்டுக் கொண்டு வரும் கட்டளை இது.

6. யூசர் அக்கவுண்ட் கட்டுப்பாடு: விண்டோஸ் சிஸ்டம் தரும் User Account Control மிக நல்ல பயனைத் தருவதாகப் பலரும் என்னிடம் கூறி உள்ளனர். ஆனால், இன்னும் சிலர் இது உதவுவதைக் காட்டிலும் உபத்திரவம் தான் அதிகம் தருகிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர். உங்களுடைய சிஸ்டம் செயல்பாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் எந்த மாற்றத்தின் போதும் இது ஒரு பாப் அப் கட்டமாக எழுந்து வரும் என்பது பலருக்குத் தெரியாது. இது பயனாளர்களை, அவர்கள் ஏற்படுத்தும் மாற்றம் குறித்து எச்சரிக்கை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு வசதியாகும். ஆனால், இது உங்களுக்குத் தேவை இல்லை என்றால், இதன் இயக்கத்தை நிறுத்திவிடலாம். தேடல் கட்டத்தில் User Account Control என டைப் செய்து, அதனை இயக்கவும். இனி, User Account Control விண்டோ காட்டப்படும். இங்கு ஸ்லைடர் ஒன்றை இயக்கி, இழுத்து உங்களுடைய நோட்டிபிகேஷன் என்னும் அறிவிக்கை அமைப்பின் தன்மையை மாற்றலாம். உங்களுக்கு இது போன்ற அறிவிக்கையே தேவை இல்லை எனில், ஸ்லைடரைக் கீழாக இழுத்து அமைக்கலாம். இந்த விண்டோவில் வலது பக்கம் ஒவ்வொன்றும் எதனைக் குறிக்கிறது என்று தகவல்களுடன் தரப்படும்.

7. ஸ்டார்ட் மெனு ஷட் டவுண்: ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்திடுங்கள். இதில் மாறா நிலையில் கீழாக உங்களுக்குக் கிடைப்பது ஷட் டவுண் மெனுவாகும். இதில் உள்ள அம்புக் குறி, மேலும் சில விருப்பங்களுக்கு நம்மை இழுத்துச் சென்றிடும். restart அல்லது log off போன்றவற்றை இங்கு காணலாம். இந்த வகையான ஷட் டவுண் உங்களின் தேர்வாக இல்லை என்றால், இதனை மாற்றியும் அமைக்கலாம். உங்கள் எண்ணப்படி மாற்றி அமைக்க, Shut down என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுக்கவும். இது, டாஸ்க் பாரில் உள்ளவற்றை உங்கள் விருப்பப்படி அமைக்கும் விண்டோவினைத் தரும். நீங்கள் விருப்பப்படும் பவர் பட்டனைத் தேர்ந்தெடுக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் sleep பட்டனை மாறா நிலையில் தோன்றும் பட்டனாக இருக்க விருப்பப்பட்டு அமைக்க விரும்புவீர்கள். அப்படிப்பட்ட விருப்பங்களை இதன் மூலம் அமைக்கலாம்.

8. கீ போர்ட் ஷார்ட் கட் கீ மூலம் புரோகிராம் தொடக்கம்: நீங்கள் அடிக்கடி சில புரோகிராம்களை இயக்குபவராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதற்காக, நீங்கள் டாஸ்க் பார் சென்று, ஒவ்வொன்றாக இழுத்து கிளிக் செய்திட வேண்டியதில்லை. எந்த புரோகிராமினை அடிக்கடி இயக்குகிறீர்களோ, அதன் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Properties தேர்ந்தெடுக்கவும். இது புரோகிராம் ப்ராப்பர்ட்டீஸ் என்ற விண்டோவினைத் திறக்கும். இங்கு Shortcut என்ற டேப்பிற்கு மாறவும். இங்கு Shortcut key என்ற பீல்டைக் கவனிக்கவும். இதில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் கீயினை டைப் செய்திடவும். இந்த கீயுடன் Ctrl + Alt ஆகிய கீகள் இணைந்து, இந்த புரோகிராமிற்கான ஷார்ட் கட் கீயாக மாறும். பின்னர், இந்த குறிப்பிட்ட புரோகிராமினைத் திறக்க, இந்த மூன்று கீகளை அழுத்தினால் போதும். அந்த புரோகிராம் திறக்கப்பட்டு இயங்கும்.

9. டாஸ்க் பார் டூல்பார்களை அதிகரிக்க: நம் திரையில் காட்டப்படும் டாஸ்க் பார், புரோகிராம் ஐகான்களைக் கொண்டிருப்பதனைக் காட்டிலும், மேலும் சில பணியினையும் மேற்கொள்ளலாம். இதற்கு, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்து, Toolbars என்பதில் மவுஸ் கொண்டு செல்லவும். இப்போது வலது பக்கம் ஒரு சிறு மெனு கிடைக்கும். இதில் மிகவும் பயனுள்ளது Address என்பதாகும். இதில் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளத்தின் முகவரியை டைப் செய்து, எண்டர் தட்டினால், உங்கள் பிரவுசர் உசுப்பிவிடப்பட்டு, இணைய தளம் காட்டப்படும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் தேடும் டைரக்டரி, போல்டர்களையும் பெறலாம். இதில் சில புரோகிராம்கள் அவற்றிற்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட டூல்பார்களைக் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாக, ஐ ட்யூன்ஸ் (iTunes) தனக்கென டூல் பார் அமைப்பினைக் கொண்டுள்ளது. அதாவது, இந்த மியூசிக் பிளேயர் புரோகிராமினை மினிமைஸ் செய்தால், டாஸ்க் பாரிலிருந்து, மியூசிக் கண்ட்ரோல் செய்திட உங்களுக்கு ஒரு டூல் பார் கிடைக்கும்.

முகத்திற்கு இளமையும், பளபளப்பும்

உப்பு
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் சாதாரண உப்பு அயோடின் சத்து மிகுந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது. சிறிது உப்பு கலந்த நீர் கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். உப்பு கலந்த நீரால் கண்களைக் கழுவ கண்கள் பளபளப்பாகும். கண்களுக்குக் கீழே தோன்றும் பை போன்ற வீக்கத்தைக் குறைக்கும்.

அயோடின் சத்துக் குறைவால் "கழலை” எனப்படும் கழுத்தின் "முன்புற வீக்கம்”, "கழுத்துக்கழலை” நோய் ஏற்படுகிறது.

தவிடு
கோதுமை, கேழ்வரகு போன்ற தானியங்களிலிருந்து நீக்கப்படும் உமி, தவிடு போன்றவை அழகிற்கு அழகூட்டும் பொருட்களாகப் பயன்படுகின்றன. வைட்டமின் ‘இ’ சத்து மிகுந்த இந்த தானியத்தின் தவிடுகள் முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, முகச் சுருக்கங்களையும் நீக்குகின்றன.

முகத்திற்கு இளமையும், பளபளப்பும் கூட்டுகின்றன. சருமத்திற்கு இதமளிப்பதால் சருமத்திற்கான அழகு சாதன கிரீம்களில் சேர்க்கப்படுகின்றன.


முல்தானி மட்டி
இது ஒரு வகை மென்மையான, களிமண் வகையைச் சேர்ந்த மண். இது சருமத்திலுள்ள அதிகப்படியான எண்ணெய்ச் சத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. எனவே அதிக எண்ணெய்ப் பசை கொண்ட சருமத்திற்கும், கேசத்திற்கும் இம்மண் பவுடர், அழுக்கு நீக்கியாகவும், அதிக எண்ணெய்ப் பசையை நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சருமத்திற்கு புத்துணர்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும் தரக் கூடியது. கேசத்தினையும் சுத்தப்படுத்தக்கூடியது. எனினும் அதிகப்படியான தொடர்ச்சியான பயன்பாட்டினால் சரும வறட்சி ஏற்படும்.

இதிலுள்ள தாது உப்புகள், வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டத்தையும் இளமையையும் தருகிறது.

உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள்!

'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம். நம் முன்னோர்கள் தாங்கள் மேற்கொண்ட உணவு பழக்கங்களின் மூலம் எந்தவகையான நோயின் தாக்குதலுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
இன்றைய நிலையை சற்று எண்ணிப் பார்ப்போமானால், 10 நபரில் 4 பேர் நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும், 3 பேர் இருதய சம்பந்தப்பட்ட நோயாளியாகவும், மீதம் 3 பேர் ஏதேனும் வேறு நோயின் தாக்குதலுக்கு ஆளானவராகவும் இருப்பார்கள்.
நம் மக்கள் தொகையில் 50 வயதுக்குமேல் உள்ளவர்களில் எந்த நோயும் இல்லாமல் இருப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்பது மிகவும் சாதாரணமான விஷயமாகிவிட்டது. நகரங்களில் 10 அடிக்கு ஒரு மருந்தகம்.
இதில் இன்னும் கொடுமையான விஷயம், நோயை சரிசெய்துகொள்ள மருத்துவமனைக்குச் சென்றால், அங்கு காலாவதியான மருந்துகள், போலி மருந்துகள், என கள்ளச்சந்தை பொருட்கள் நோயாளிகளின் உயிர்களை பறிக்கின்றன.
இதற்கெல்லாம் மூலகாரணம் யாரென்று சிந்திப்போமேயானால் கண்டிப்பாக அது நாம்தான்.. உடலை சீராக பேணுவதை தவிர்த்து பொருள் தேடும் நோக்கில் தன்னை மறந்து அலைந்ததன் விளைவுதான் இது..
இடையிடையே களைப்பு ஏற்பட்டால், செயற்கை குளிர்பானங்கள், அவசரகதி உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட பொருட்கள் என கண்டவற்றையும் வாங்கி உண்கிறோம். மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறோம் என்ற பெயரில் மது, புகை போதை வஸ்து என ஆரம்பித்து அதற்கு அடிமையாகிறோம்.
இப்படியாக நோய்களை நாம் காசுகொடுத்து வாங்கி, உடலையும் நோயையும் இணைபிரியா நண்பர்களாக்கி நமக்குள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் நம் முன்னோர்களின் உணவு பெரும்பாலும் இயற்கையைச் சார்ந்தே இருந்து வந்தது. உதாரணமாக அரிசியை எடுத்துக் கொண்டால் கைக்குத்தல் அரிசி, அதாவது உமி நீக்கி தவிடு நீக்கப்படாத அரிசி. இந்த தவிடு நீக்கப்படாத அரிசியில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வைட்டமின் பி1 நிறைந்துள்ளது. இது இருதயத்திற்கும், நரம்பு மண்டலத்திற்கும் ஊட்டமளிக்கக்கூடியது.
மேலும் தானிய வகைகள், இயற்கையாய் விளையும் காய்கறிகள் என உண்டுவந்துள்ளனர். அதனால் அவர்கள் நோயின்றி வாழ்ந்தனர். ஆனால் இன்று அனைவருமே வெள்ளை வெளேரென்று பூப்போன்ற சாப்பாட்டைத்தான் விரும்புகின்றனர். நாகரீகம் என்ற பெயரிலும், அந்நிய பொருள் மோகத்திலும் இயற்கையை மறந்து செயற்கையையே உண்மையென நம்பி அதற்குள் ஊறிவிட்டனர்.
இந்த நிலை மாறுவதென்பது சற்று சிரமம்தான். இருப்பினும் அதோடு, உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகள், கனிகள், தானியங்களை உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் தொந்தரவுகள் மேலும் அதிகமாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
அவற்றில் சிலவற்றை பார்ப்போம்:
வாழைப்பூ
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும் புத்துணர்வையும் தரவல்லது.
வாழைத்தண்டு
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.
வாழைக்காய்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.
பாகற்காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
சேப்பங்கிழங்கு
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.
பீட்ரூட்
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.
வெண்டைக்காய்
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்டும். நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும்.
கோவைக்காய்
வைட்டமின் ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன. வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.
முருங்கைக் காய்
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.
சுண்டைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. உணவில் சுண்டைக்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
சுரைக்காய்
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது. இவை உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
குடைமிளகாய்
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
சௌசௌ
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன. எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
அவரைக்காய்
புரதம், நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.
காரட்
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கொத்தவரங்காய்
இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கத்தரி பிஞ்சு
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலாத் தளங்கள்

நாகர்கோவில்
சுசீந்திரம்
வட்டக் கோட்டை
பத்மநாபபுரம் அரண்மனை
சிதறால் சமண நினைவு சின்னங்கள்
மாத்தூர் தொட்டிப் பாலம்
திருநந்திக்கரை குகைக் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
உதயகிரிக் கோட்டை
உலக்கை அருவி
பேச்சிப்பாறை அணைக்கட்டு
பெருஞ்சாணி அணைக்கட்டு
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
முட்டம் கடற்கரை
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
சங்குத்துறை கடற்கரை
ஆலஞ்சி கடற்கரை

சிதரால்

மலைமீது அமைந்துள்ள திருக்கோயில். சமணமத தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் நிறைந்த அழகுக் கோயில். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் பராமரிக்கப்படும் இக்கோயிலை தரிசிக்க கன்னியாகுமரியிலிருந்து 45 கி.மீ. செல்ல வேண்டும்.

காந்தி நினைவாலயம்

மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள நினைவாலயம். முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேசத் தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. மகாத்மா பிறந்த அக்டோபர் 2 ஆம் நாள் மட்டும் ஒரு குறுகிய துளையின் வழியாக அஸ்தி கலசத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது. கடலில் கால் நனைக்கும் முன் அகிம்சை அண்ணலை ஞாபகம் கொள்ளுங்கள்.

அரசு அருங்காட்சியகம்

தென்னிந்திய கோயில்களின் கைவினை கலைபொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள காட்சியகம். கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. குமரிக்குச் செல்லும் பயணிகள் இங்கும் ஒருமுறை சென்று வாருங்கள். புதியதொரு அனுபவத்தை உணர்வீர்கள்.

குகநாதசுவாமி கோயில்

தென்கோடி முனையிலும் சோழர்கள் கால்தடம் பதித்துள்ளார்கள் என்பதற்கு இக்கோயில் ஒரு சான்றாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ராஜராஜசோழன் கட்டிய கோயில் என்று கருதப்படுகிறது. சோழர்களின் கட்டடக் கலை பாணியில் மிளிரும் குருநாதசுவாமி கோயிலிலுள்ள பதினாறு கல்வெட்டுகள் அதன் வரலாறைச் சொல்கின்றன. இக்கோயில் குமரி ரயில் நிலையம் அருகே உள்ளது. நேரம் காலை 6-11.15 மாலை 5-8.15 மணி வரை.

காமராசர் நினைவாலயம்

எளிய குடும்பத்தில் பிறந்து, முதல்வராக உயர்ந்தவர் பெருந்தலைவர் காமராசர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய பள்ளிக் குழந்தைகளின் வாழ்வில் கல்வி விளக்கை ஏற்றியவர் கர்மவீரர். படிக்காத மேதை என்று தமிழக மக்களால் புகழப்பட்ட மக்கள் தலைவர் காமராசரின் நினைவாலயம். இது 2000 அக்டோபர் 2 ஆம் தேதி திறந்து வைக்கபட்டது.

கேரளபுரம்

விநாயகர் கோயில் இல்லாத ஊர் இருக்கிறதா? இதுவொரு புதிரான விநாயகர். தக்கலை அருகேயுள்ள கேரளபுரத்து விநாயகர் கோயில் பிரபலமானது. இங்குள்ள விநாயகர் சிலை ஆறுமாதம் கறுப்பாகவும் ஆறு மாதம் வெள்ளையாகவும் தெரிவார். நேரில் சென்றால் புதிரின் உண்மை புரியும்.

ஜீவா மணி மண்டபம்

ஜீவா எனப்படும் ப.ஜீவானந்தம் எளிமையான தலைவர். தமிழகத்தில் மார்க்சிய இயக்கம் வளரக் காரணமாக இருந்த மார்க்சிய இயக்க முன்னோடி. தாமரை, ஜனசக்தி போன்ற பத்திரிகைகளின் வாயிலாகப் பொதுவுடமை. கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றவர். தமிழ் இலக்கியத்தில் புலமை மிக்கவர். சென்னை வண்ணாரப்பேட்டையின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர். சிறந்த நாடாளுமன்றவாதி. இந்த அரிய தலைவரை பெருமைப்படுத்தும் விதமாக ஏப்ரல் 18, 1998 இல் நாகர்கோயிலில் இந்த நினைவாலயம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு அவரது உருவச்சிலை வாழ்க்கையைச் சித்திரிக்கும் நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

குமரியம்மன் கோயில்

கடலில் நீராடும் துறை அருகே ஓர் அழகிய சித்திரம்போல அமையப் பெற்றிருக்கிறது குமரியம்மன் கோயில். இந்த அம்மனின் பெயருக்குக் காரணம் இருக்கிறது. குமரி அம்மன் சிவனைத் திருமணம் செய்துகொள்ள முடியாத நிலையில் காலம் முழுதும் கன்னியாகவே வாழ ஒரு நோன்பை மேற்கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவே கன்னியாகுமரி என்று பெயர் வரக்காரணம் என்கிறார்கள். குமரியம்மனின் வைர முக்குத்தியின் ஜொலிப்பை கடலில் இருந்தும் கூடப் பார்க்கலாம் என்று சொல்கிறார்கள். தொலைபேசி - 04652 - 246223.

அரசு பழப்பண்ணை

பழங்கள் செழிப்பின் அடையாளம். பழங்களை கூடையில் பார்ப்பதைவிட தோட்டத்தில் பார்ப்பது தனியொரு அற்புத அனுபவம். இந்த அரசு பழப்பண்ணையில் பல்வேறு பழ வகைகள், நூற்றுக்கணக்கான செடி வகைகள் மற்றும் பல நறுமண மரங்களைக் காண முடியும். கன்னியாகுமரியிலிருந்து நாகர்கோயில் சாலையில் 2 கி.மீ. சென்றால் பழப்பண்ணையை அடையலாம். நேரம் காலை 9-11 மதியம் 1-3 மணி வரை. விடுமுறை சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.

மாத்தூர் தொங்குபாலம்

ஓர் ஓவியக் கோட்டினைப்போலத் தோன்றும் இது ஆசியாவின் மிக நீளமான குறுக்குப் பாலம். 115 அடி உயரமும் 1 கி.மீ. நீளமும் உடையது. அப்பாடா! நேரில் பார்த்தால் நிச்சயம் அசந்து போவீர்கள். திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் அருவிக்கரை வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது தொங்கு பாலம். பரளியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட இப்பாலம் வழியே பட்டணம்கல் மலையிலிருந்து இன்னொரு பக்கத்திற்கு நீர் எடுத்துச் செல்லப்படுகிறது. விளவங்கோடு கல்குளம் பகுதிகளின் விவசாய வளர்ச்சிக்காக அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராசர் முயற்சியின் கீழ் கட்டப்பட்ட இந்தப் பாலம் ஒரு சுற்றுலாத் தலமாக மாறியிருக்கிறது. இங்கு குழந்தைகள் பூங்காவும் நீராடும் துறையும் இருக்கின்றன.

மருத்துவ மலை

மருத்துவ மலை மருந்து வாழும் மலை என்று அழைக்கப்படுகிறது இது மருத்துவ மூலிகைகள் விளையும் பண்ணையாக இருக்கிறது. ராமனின் தம்பி லட்சுமணன் போரில் அடிபட்டு காயமடைந்தபோது அனுமன் அக்காயத்தை குணப்படுத்துவதற்காக மகேந்திரபுரியிலிருந்து இலங்கைக்கு கொண்டு சென்ற சஞ்சீவி மலையின் ஒரு துண்டு இங்கு விழுந்து மருத்துவ மலையாக நிற்கிறது என்று கதை. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன. இம்மலையின் உச்சி 800 அடி. இது நாகர்கோயிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.

முக்கூடல்

முக்கடல் சங்கமித்தால் என்ன? நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீரை முக்கூடல்தான் வழங்குகிறது. இந்த அணையை கட்டியவர் சித்திரை மஹாராஜா. சுசீந்திரம், கன்னியாகுமரி நகராட்சிகளுக்கும் தண்ணீர் தாகத்தை முக்கூடல்தான் தணிக்கிறது. சுற்றிப் பார்த்து மகிழ சிறந்த இடம். கூட்டமாகச் சென்று குதூகலித்து வாருங்கள்.

முருகன் குன்றம்

மனித சஞ்சாரமற்ற ஓர் அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள் உண்மையா? அப்படியானால் செல்ல வேண்டிய இடம் முருகன் குன்றம். வெயில் பொழுதுகளிலும் நிலாப் பொழுதுகளிலும் ஆளரவமற்ற அமைதி குடியிருக்கும் குன்றம் இது. சித்ரா பௌர்ணமியன்று முருகன் குன்றம் கோடியழகு. இங்கு செல்ல கன்னியாகுமரியிலிருந்து 2 கி.மீ. பயணிக்க வேண்டும். சம்மதம் தானே?

முட்டம்

கடல் உரசும் கரைகள்; அலை புரளும் கடல், ஒரு தனித்துவமான கடலோர கிராமம் முட்டம். அப்படியே அமைதியாக நேரம் போவது தெரியாமல் மணற்பரப்பில் அமர்ந்துவிடலாம். என்னவொரு அழகு. சொல்லில் சிக்காத காட்சிகள் ஏராளம். நம்மைக் கண்சிமிட்டி அழைக்கும் கலங்கரை விளக்கம் இங்குண்டு. கன்னியாகுமரியிலிருந்து முட்டம் கிராமம் பார்க்க 40 கி.மீ. செல்லமாட்டீர்களா என்ன.?

திருவள்ளுவர் சிலை

தமிழினம் செழிக்க இரண்டடி குறள் தந்த வள்ளுவருக்கு விவேகானந்தர் பாறையில் எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயரச் சிலை. இந்த உயரம் 133 அதிகாரங்களை நினைவுபடுத்துகிறது. நவீன கட்டடக் கலையின் அழகையும் திராவிடக் கலை நுட்பங்களையும் உள்ளடக்கி 5000க்கும் மேற்பட்ட சிற்பிகளின் உளியில் பிறந்த அற்புதம். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட நினைவுச் சின்னம். படகுகள் மூலம் சிலையினைப் பார்வையிடலாம்.

இந்த சிலை அமைக்கும் பணி 1990, செப்டம்பர் 6 இல் தொடங்கப்பட்டு 2000, சனவரி 1 இல் திறக்கப்பட்டது. உலகில் இதுபோன்ற கருங்கற்களால் ஆன சிலை கிடையாது. பீடத்தின் 38 அடி உயரமானது திருக்குறளின் அறத்துப்பாலின் 38 அதிகாரங்களையும், பீடத்தின் மேல் நிற்கும் 95 அடி உயரச் சிலையானது திருக்குறளின் பொருள் மற்றும் இன்பத்துப்பாலின் 95 அதிகாரங்களையும் குறிப்பதாகத் திகழ்கின்றது.

சிலை குறிப்புகள்

மொத்த சிலையின் உயரம் - 133 அடி
சிலையின் உயரம் - 95 அடி
பீடத்தின் உயரம் - 38 அடி
சிலையின் உருவாக்கம் - 3 டன் முதல் 8 டன் வரை எடையுள்ள 3681 கருங்கற்களைக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.
சிலையின் மொத்த எடை - 7,000 டன்
சிலையின் எடை - 2,500 டன்
பீடத்தின் எடை - 1,500 டன்
பீடத்தைச் சுற்றி அமைந்துள்ள மண்டபத்தின் எடை - 3,000 டன்

சிலை அளவுகள்

முக உயரம் - 10 அடி
கொண்டை - 3 அடி
முகத்தின் நீளம் - 3 அடி
தோள்பட்டை அகலம் -30 அடி
கைத்தலம் - 10 அடி
உடம்பு (மார்பும் வயிறும்) - 30 அடி
இடுப்புக்குக் கீழ் தொடை மற்றும் கால் - 45 அடி
கையில் ஏந்திய திருக்குறள் ஏட்டின் நீளம் - 10 அடி

விவேகானந்தபுரம்

விவேகானந்தா கேந்திராவின் தலைமையகம் விவேகானந்தபுரம் என்று அழைக்கப்படுகிறது. இளைஞர்களின் மனங்களில் தன்னம்பிக்கையை விதைத்த விவேகானந்தரின் வாழ்க்கையை விவரிக்கும் படங்களும் அவரது சிலையும் நிறுவப்பட்டுள்ளது. பயணிகள் தங்கிச் செல்ல வசதிகள் இங்குண்டு மாகடல் நீரிலிருந்து சூரியன் மேலெழும் பரந்து விரிந்த காட்சியை விவேகானந்தபுரம் கடற்கரையிலிருந்து பார்ப்பது அற்புதம்.

உலக்கை அருவி

கோடையிலும் வற்றாத அருவி இது. தோவாளை வட்டம் அழகிய பாண்டியபுரத்தில் அமைந்துள்ள இயற்கை அற்புதம். இயற்கையின் பேரழகை ரசிக்கவும் அருவியில் நீராடி மகிழவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அரசின் பாதுகாப்பிலுள்ள பாதை வழியாகச் சென்று அருவியை அடைய வேண்டும்.

உதயகிரி கோட்டை

தமிழகத்தின் பழமையான நினைவுச் சின்னம். மார்த்தாண்டவர்மன் ஆட்சி செய்த கால கட்டத்தில் (கி.பி. 1729 - 1758) கட்டப்பட்ட கோட்டை. இங்கு ஒரு துப்பாக்கி பட்டறையும் டச்சுக்காரரான தளபதி டிலானியின் கல்லறையும் இருக்கிறது. டச்சு தளபதி பற்றி ஒரு சுவாரசியமான கதை உண்டு. குளச்சலில் நடந்த போரில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதியான டச்சு தளபதி டிலானி மன்னன் மார்த்தாண்ட வர்மனின் நம்பிக்கையைப் பெற்று விசுவாசமான தளபதியாக உயர்ந்தான். அதுமட்டுமல்ல மார்த்தாண்ட அரச வீரர்களுக்கு ஐரோப்பிய போர் முறையைக் கற்றும் தந்தானாம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைப் பகல் நேரத்தில் மட்டுமே பயணிகள் பார்த்து களிக்க முடியும்.

வள்ளிமலை

முந்நூறு படிகள் ஏற சம்மதமா? அப்படியென்றால் குன்றின் மீது அமைந்த வள்ளிமலை கோயிலைத் தரிச்சிக்கலாம். ஒன்றின்மேல் ஒன்றாக மூன்று அடுக்குள் கொண்டது. விநாயகப் பெருமானும் காசி விசுவநாதரும் எழுந்தருளியுள்ள இக்கோயில் பல்லவர் மற்றும் நாயக்கர் கால கட்டடக் கலைப் பாணியில் அமைந்தது.

தெக்குறிச்சி கடற்கரை

ஓர் அமைதியான கடற்கரையைக் கொண்ட கடலோர குட்டி கிராமம் தெக்குறிச்சி. சவுக்கு மரங்களின் வரிசையில் கடலைப் பார்ப்பது கவின்மிகு அனுபவம். சுற்றிப் பார்க்க சிறந்த இடம் என்ற பெயர் சுற்றுலாப் பயணிகளிடம் உண்டு. மேற்குக் கடற்கரை சாலையில் உள்ளது.

திரிவேணி சங்கமம்

முக்கடல் சங்கமம், வங்கக் கடல், அரபிக் கடல், இந்துமாக் கடல் என முக்கூடலும் சங்கமிக்கும் புனித நீர்த்தலம். குமரிக்குச் செல்கிறவர்கள் சங்கமத்தை தரிசிக்காமல் திரும்பக் கூடாது.

வட்டக்கோட்டை

இதுவொரு கம்பீரமான கற்கோட்டை. குமரி முனையின் வடகிழக்கில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இக்கோட்டை தென் திருவிதாங்கூர் வரிசை என்று சொல்லப்படும் எல்லைக் காப்பரண் வரிசையில் வருகிறது. நாஞ்சில் நாட்டு பாதுகாப்பிற்காக மன்னன் மார்த்தாண்டவர்மன் கட்டினான். கோட்டையின் உட்புறத்தில் உறுதி வாய்ந்த உட்புறக் கட்டுக்கள் மன்னனின் டச்சுத் தளபதி டிலானியின் உத்தரவின் கீழ் கட்டப்பட்டவை. செங்கோண வடிவிலான இந்த வட்டக்கோட்டை மூன்று ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. இதன் அழகை பிரமாண்டத்தைக் காண ஒருமுறை சென்று வாருங்கள். இனி வார்த்தைகள் போதும்.

திற்பரப்பு அருவி

ஒரு பரந்து விரிந்த பார்வையைத் தரும் திற்பரப்பு, அழகும் புனிதமும் ஒன்று கூடிய இடம். இங்குள்ள புனித அருவியும் பச்சை மலையும் கோதையாறும் நம்மை வசீகரித்துக் கொள்ளும் அழகின் தொட்டில்கள் பளிச்சென மின்னி தெறித்து விழும் இந்த அருவி பார்வைக்கு விருந்தளிக்கிறது. தரையில் கொட்டும் அருவி தலையில் முட்டும்போது புத்துணர்ச்சி கிடைக்கும். நீராடி மகிழ திற்பரப்பு திகைப்பூட்டும் அனுபவம் தரும்.

தேங்காய்ப்பட்டினம் கடற்கரை

தென்னந்தோப்புகள் நிறைந்த கடற்கரை கிராமம். இது பழங்காலத்தில் வெளிநாடுகளுடன் குறிப்பாக அரேபியாவோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. ஆற்றின் கழிமுகக் கரைகளில் தென்னந்தோப்புகள் சூழ அழகிய தாமிரபரணி இங்கு கடலில் சங்கமிக்கிறது. தென்னை மரங்கள் அணிவகுத்திருக்க இந்தக் காயலில் படகு சவாரி செய்யும் அனுபவம் தனிப்பரவசம். விளவங்கோடு வட்டம் பேயன்குளம் கிராம் அருகே மேற்குக் கடற்கரை சாலையில் தேங்காய்ப்பட்டினம் அமைந்துள்ளது. இந்தக் கடலோர கிராமத்தை கண்டுகளிக்க நாகர்கோவிலிருந்து 35 கி.மீ. பயணம் செய்ய வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம்

சகோதர, சகோதரிகளே என்ற சொல்லில் உலகைக் கட்டிப் போட்டவர். எழுமின்!விழுமின்! என்ற வார்த்தைகளின் மூலம் இளைய மனங்களில் எழுச்சி தீபம் ஏற்றியவர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவர். குமரிப் பாறையில் விவேகானந்தரின் சிலையும் நினைவு மண்டபமும் எழுப்பப்பட்டு உள்ளது. இங்கு அமைதி தவழும் தியான மண்டபம் இருக்கிறது. படகுகள் மூலம் பாறையை அடைவது ஒரு பரவச அனுபவம்.

வேலுத்தம்பி தளவாய் நினைவாலயம்

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர்புரிந்த மாவீரன் தளவாய் வேலுத்தம்பியின் நினைவாயலம் கல்குளம் வட்டத்திலுள்ள குக்கிராமமான தல்லாகுளம்தான். இந்த மாவீரன் பிறந்த தொட்டில்பூமி. இவரது வீட்டை ஆங்கிலேயர்கள் இடித்து விட்டார்கள். ஆனால் அவரது உடன் பிறந்தவர்கள் அந்த வீட்டைக் கட்டினர். இப்போது இவ்வீட்டில் தளவாய் வேலுத்தம்பி நினைவாக அவர் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரியிலிருந்து 30 கி.மீ. பயணித்தால் தல்லாகுளத்தை அடையலாம்.

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை

முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும். சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்...

பொதுவான ஆலோசனைகள் :

தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.

மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு.

இப்போது மேட் பினிஷ் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவதுதான் உபயோகிக்க வேண்டும்.

தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கருத்தும், வறண்டும் போகக் கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.

லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும்போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டியது மிக முக்கியம்.

லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக்கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது. எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண்டும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும்.

தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும்.

முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும்.

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.

கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.

உதடுகளில் தடவிய லிப்ஸ்டிக்கை நீக்க பேஸ் வாஷ் அல்லது தேங்காய் என்ணெயை உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.

உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.

உதடுகளுக்கு மேக்அப் போடும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் : முதலில் பவுண்டேஷன் தடவிவிட்டுப் பிறகு லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

லிப்ஸ்டிக் உபயோகித்துப் பழக்கமில்லாதவர்கள் லிப் சால்வ் உபயோகிக்கலாம். அதே மாதிரி பல வண்ண நிறங்களில் இப்போது வாசலின் வந்துள்ளது. அதையும் உபயோகிக்கலாம்.

லிப்ஸ்டிக் உபயோகிக்காமல் நேரடியாக லிப் கிளாஸ் தடவிக் கொள்ளும் பழக்கம் சிலருக்கு உண்டு. இது தவிர்க்கப்பட வேண்டிய விஷயம். லிப்ஸ்டிக்கின் மேல்தான் லிப் கிளாஸ் தடவப்பட வேண்டும்.

லிப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் லிப்ஸ்டிக் தடவினாலும் லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.